இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.
எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் ஞாயிற்றுகிழமை இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறைகள் கூறியுள்ளன.
இஸ்ரேல்
"இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம்": அமெரிக்கா
இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் சீக்கிரமே இஸ்ரேலை தாக்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அப்படி ஒரு தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ஈரானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம். ஈரான் வெற்றிபெறாது" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரானின் தாக்குதலின் போது இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
ஈரான் எல்லைகளில் இருந்து 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் கணிசமான அளவை ஈரான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.