LOADING...
ஹார்முஸ் ஜலசந்தியில் 'சுங்க வரி'? உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானின் அடுத்த அதிரடி
'கடல்சார் போக்குவரத்து வரி' விதிக்க ஈரான் அரசு ஆலோசித்து வருகிறது

ஹார்முஸ் ஜலசந்தியில் 'சுங்க வரி'? உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானின் அடுத்த அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2026
05:17 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு 'கடல்சார் போக்குவரத்து வரி' விதிக்க ஈரான் அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த 33 கி.மீ அகலமுள்ள குறுகிய பாதை வழியாகவே கடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ச் சூழலைக் காரணம் காட்டி, தனது எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை ஈரான் ஏற்கனவே தடுத்து வருகிறது. இந்நிலையில், உணவு மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஈடுபடும் நாடுகளிடம் வரி வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரத் தடை

கப்பல் போக்குவரத்து பாதிப்பினால் உலக பொருளாதாரம் பாதிப்பு

ஈரானின் உயர்மட்ட ஆலோசகர் ஒருவர் கூறுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு இந்த ஜலசந்தியில் "புதிய விதிமுறைகள்" அமல்படுத்தப்படும் என்றும், ஈரான் மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி இறுதி முதல், சுமார் 20 வணிகக் கப்பல்கள் இப்பகுதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்து கடுமையாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்தியா மற்றும் சீனாவிற்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களை ஈரான் தற்போதைக்கு அனுமதித்து வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தங்களின் 80% எரிசக்தி ஏற்றுமதிக்கு இப்பாதையையே நம்பியுள்ளன. ஈரானின் இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கை, உலகளாவிய எரிபொருள் விலையை மேலும் உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.

Advertisement