இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு
பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் உடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறோம் என்று லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர். அதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசித் தாக்கி, குறைந்தது 600 குழந்தைகள் உட்பட 1,900 பேரைக் கொன்றது. இதனையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது. ஏழாவது நாளாக இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தின் துணைத் தலைவர் நைம் காசிம் பேசியுள்ளார்.
"நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்": நைம் காசிம்
" ஹிஸ்புல்லாவாகிய நாங்கள், போரில் எங்களது பங்கை ஆற்றி வருகிறோம். எங்கள் கொள்கைகள் மற்றும் திட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து அதற்கு பங்களிப்போம்." என்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட காசிம் கூறியுள்ளார். "நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். நடவடிக்கை எடுக்க நேரம் வரும்போது, நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களுடன் சமீப நாட்காளாக இஸ்ரேல் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. லெபனான் மற்றும் இஸ்ரேல் தனித்தனி நாடுகள் என்பதால், இந்த போர் பல நாட்டு போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது.