LOADING...
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்

இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 26, 2026
07:03 am

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 120-லிருந்து வெறும் 5 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஈரான் விடுத்துள்ள அறிவிப்பின்படி, ஈரானுக்கு எதிராகச் செயல்படாத மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் கப்பல்கள், முறையான ஒருங்கிணைப்புடன் இந்த பாதையைப் பயன்படுத்தலாம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் கப்பல்கள் தொடர்ந்து இலக்காக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை

போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்துள்ள அரக்சி, "மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அர்த்தமாகாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலரை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்திருந்த நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி சிலிண்டர்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பிப் பதற்றமடைய வேண்டாம் என்றும் இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

Advertisement