நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் வேர்கள், 1939 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவின் ப்ராக் நகரில் நடந்த மாணவர் இயக்கத்தின் இருண்ட அத்தியாயத்தில் புதைந்துள்ளன. இது வெறும் கல்வியைக் கௌரவிக்கும் நாள் மட்டுமல்ல, சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த வீரத்தைப் போற்றும் தினமாகும்.
சோக பின்னணி
ப்ராக் நகரின் சோகம் (1939)
1939 ஆம் ஆண்டு, செக்கோஸ்லோவாக்கியா நாஜிக்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தபோது, ஜெர்மானிய படையெடுப்பிற்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட செக் மருத்துவ மாணவர் ஜான் ஒப்லெடல் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 15 அன்று நடந்த அவரது இறுதிச் சடங்கு, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டமாக மாறியது. இதற்கு நாஜிக்கள் விரைவாகவும் கொடூரமாகவும எதிர்வினையாற்றினர். நவம்பர் 17, 1939 அன்று விடியற்காலையில், ஜெர்மானியப் படைகள் ப்ராக் பல்கலைக்கழகங்களைச் சுற்றி வளைத்தன. விசாரணையின்றி ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 1,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன், அனைத்துச் செக் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. நவீன வரலாற்றில் மாணவர் செயல்பாட்டின் மீதான மிக வன்முறைமிக்க ஒடுக்குமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.
நினைவு நாள்
நினைவு நாளாக மாற்றம்
போருக்குப் பிறகு, உலகளாவிய மாணவர் இயக்கம் நவம்பர் 17 ஐ அடக்குமுறைக்கு எதிரான வீரத்தின் சின்னமாக அங்கீகரித்தது. 1941 ஆம் ஆண்டில், 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாணவர் கவுன்சிலால் இந்தத் தேதி அதிகாரப்பூர்வமாகச் சர்வதேச மாணவர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தத் தினம் கல்வி உரிமை, கருத்துச் சுதந்திரம், மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞர்களின் வலிமையை உலகிற்கு நினைவூட்டுவதாக அமைகிறது.