இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் ஆபத்தா? முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் இன்று காலை (ஏப்ரல் 2) உள்ளூர் நேரப்படி 6:48 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், டெர்னேட் தீவுக்கு அருகே 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் மிக வலுவாக இருந்ததால், கட்டிடங்கள் குலுங்கியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
சுனாமி எச்சரிக்கை
பயங்கரமான சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அபாயகரமான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம், கடல் மட்ட மாற்றங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
சுனாமி அலைகள்
பதிவான சுனாமி அலைகளின் உயரம்
நிலநடுக்கம் ஏற்பட்ட அரை மணி நேரத்திற்குள்ளேயே சில கண்காணிப்பு நிலையங்களில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. பிடுங் பகுதியில் 20 சென்டிமீட்டர் உயரத்திலும், மேற்கு ஹல்மஹேரா பகுதியில் 30 சென்டிமீட்டர் (சுமார் ஒரு அடி) உயரத்திலும் அலைகள் எழும்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா, தைவான் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளிலும் சிறிய அளவிலான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், ஹவாய் மற்றும் குவாம் தீவுகளுக்கு இப்போதைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்போதைய நிலை
பாதிப்புகள் குறித்த தற்போதைய நிலை
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள பிடுங் நகர மக்கள், நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். "நாங்கள் தூங்கி எழுந்தபோது திடீரென பூமி குலுங்கியது, பயத்தில் அனைவரும் வெளியே ஓடி வந்தோம்" என்று உள்ளூர்வாசி மார்டன் மண்டாகி கூறியுள்ளார். மீட்புப் படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் தற்போது கடற்கரை ஓரங்களில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நெருப்பு வளையம்
நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா
இந்தோனேசியா பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சுமார் 2.3 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.