இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி
டெல்லியில் இருந்து தோஹா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று(மார் 13) திருப்பி விடப்பட்டது. "துரதிர்ஷ்டவசமாக, விமானம் தரையிறங்கியவுடன், பயணி இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக் குழு அறிவித்தது," என்று இன்டிகோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. 6E-1736 என்ற விமானம் ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்க முடிவு செய்தது. இருப்பினும் விமானம் தரையிறங்கும் முன்பே அந்த பயணி உயிரிழந்தார். உயிரிழந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல்லா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறப்புச் சான்றிதழ் வழங்கிய பாகிஸ்தான் மருத்துவர்கள்
பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) மற்றும் இஸ்லாமாபாத் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) ஆகியவற்றின் மருத்துவர்கள், பயணியின் இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளனர் என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ARY நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்களை அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தெரிவித்துகொள்கிறோம். நாங்கள் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானத்தின் பிற பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" என்று IndiGo ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.