குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தப் போரில் இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை குவைத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஒரு சேவை கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இது குறித்து குவைத் மின்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,"குவைத் நாட்டின் மீது ஈரான் நடத்தியுள்ள இந்த அத்துமீறிய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது," எனத் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சேதங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்பு
தொடரும் உயிரிழப்புகள்
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் ஒரு இந்தியர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு உயிரிழப்பு நேரிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, ஏழு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய உயிரிழப்பு அந்த எண்ணிக்கையை எட்டாக உயர்த்தியுள்ளது. பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளிலும் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.