லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இச்சம்பவம் மே 9 அன்று, கிட்டத்தட்ட 11.50 மணியளவில்(லண்டன் உள்ளூர் நேரப்படி) நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட 22 வயதுடையவர், கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, செவ்வாய்க்கிழமை விசாரணை காவலில் வைக்கப்பட்டார். அனிதா முகே என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், தேசிய சுகாதார சேவையில் (NHS) மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் ஆவார். கடந்த வாரம் லண்டனில் உள்ள எட்க்வேர் பகுதியில் உள்ள பேர்ன்ட் ஓக் பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, ஜலால் டெபெல்லா என்பவர் அவரைக் கத்தியால் குத்தினார்.
நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜலால் டெபெல்லா
ஜலால் டெபெல்லா அந்த பெண்ணின் மார்பிலும் கழுத்திலும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அதே நாளில் வடக்கு லண்டனின் கொலிண்டேல் பகுதியில் கொலை சந்தேகத்தின் பேரில் டெபெல்லா கைது செய்யப்பட்டார். அனிதாவை கொலை செய்த ஆயுதத்தை ஜலால் டெபெல்லா வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பெருநகர காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டவர் லண்டனில் உள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் ஆஜரானார் என்று கூறியது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.