
உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா
செய்தி முன்னோட்டம்
உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து, அஜய் பங்காவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கி தலைவர் பதவிக்கான அமெரிக்க வேட்பாளராக கடந்த மாதம் அறிவித்தார்.
2019ஆம் ஆண்டு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட டேவிட் மல்பாஸும் போட்டியின்றி உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
உலக வங்கியின் தலைவராக இதுவரை அமெரிக்க வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தியா
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்க குடிமகனான அஜய் பங்கா
63 வயதான பங்கா, இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
தற்போது அவர் ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
இதற்கு முன்பு, அவர் மாஸ்டர்கார்டில் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார்.
ஜோ பைடனால் நாமினேஷன் செய்யப்பட்டதில் இருந்து, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, ஐவரி கோஸ்ட், கென்யா, சவூதி அரேபியா மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகளும் அஜய் பங்காவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் புதிய தலைவர் மே மாத தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உலக வங்கியின் வாரியம் கூறியுள்ளது.