உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29ஆம் தேதி வரை வேட்பாளர் நாமினேஷன்களை ஏற்கவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பெண் வேட்பாளர்களை வலுவாக ஆதரிப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.
உலக வங்கியின் தலைவர் பொதுவாக அமெரிக்கராக இருப்பார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வழக்கமாக ஐரோப்பியராக இருப்பார்.
63 வயதான பங்கா, இந்திய-அமெரிக்கர் ஆவார். தற்போது இவர் ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
இவர் முன்பு மாஸ்டர்கார்டில் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார்.
அமெரிக்கா
காலநிலை மாற்றத்தை திறம்பட கையாளும் தலைவர்
"காலநிலை மாற்றம் உட்பட மிக அவசியமான சவால்களைச் சமாளிக்க பொது-தனியார் நிதிகளைத் திரட்டுவதில் முக்கியமான அனுபவம் பங்காவுக்கு உள்ளது" என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தற்போதைய உலக வங்கித் தலைவர் மால்பாஸ், தான் ஒரு வருடம் முன்னதாகவே பதவி விலகுவதாக அறிவித்தார்.
இவர் 2019 இல் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.
இவரது காலநிலை நிலைப்பாடு பலமுறை சர்ச்சைக்கு உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பதவிலகவில்லை என்றால் இவரது பதிவிக்காலம் 2024 வரை நீடித்திருக்கும்.
உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே அந்த நாட்டில் உள்ளவர்களே தலைமை நிர்வாகியாக தேர்தெடுக்கப்படுகிறார்கள்.