LOADING...
யுபிஐ, ராணுவம் மற்றும் விண்வெளித் துறையில் புதிய கூட்டணி! இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

யுபிஐ, ராணுவம் மற்றும் விண்வெளித் துறையில் புதிய கூட்டணி! இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2026
08:04 pm

செய்தி முன்னோட்டம்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீஷெல்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் உயர்மட்ட அளவிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக முக்கியமான 19 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடலை ஒரு வாய்ப்புகளின் கடலாக மாற்றுவதே இந்தியாவின் முதன்மை தொலைநோக்கு பார்வை என்றார்.

கடல்சார் பாதுகாப்பு

ராணுவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியாவின் உதவிகள்

இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சீஷெல்ஸ் ராணுவத்திற்கு ஒரு அதிவேக ரோந்து கப்பல், 10 பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 5 லேசர் ரேடியல் ரக படகுகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. இதுதவிர, சீஷெல்ஸ் கடலோர காவல்படையின் பிஎஸ் ஜோராஸ்டர் கப்பலை முழுமையாக புனரமைத்துக் கொடுத்துள்ளதோடு, அந்நாட்டின் டோர்னியர் போர் விமானத்தை அதிநவீன கிளாஸ் காக்பிட் வசதியுடன் இந்தியா மேம்படுத்தித் தந்துள்ளது. பிராந்தியத்தின் கூட்டுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்தியாவின் மகாசாகர் (MAHASAGAR) கொள்கையின் கீழ் இந்த ராணுவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

யுபிஐ

சீஷெல்ஸில் அறிமுகமாகும் யுபிஐ மற்றும் மலிவு விலை இந்திய மருந்துகள்

இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையேயான டிஜிட்டல் மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் என்பிசிஐ மற்றும் சீஷெல்ஸ் மத்திய வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் தீவு நாடான சீஷெல்ஸில் இந்தியாவின் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இந்தியாவின் ஜன ஔஷதி திட்டத்தின் கீழ் தரமான மற்றும் மலிவு விலை இந்திய மருந்துகளை சீஷெல்ஸ் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் எச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் அந்நாட்டு சுகாதார அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ளது.

Advertisement

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி முதல் புதிய தேசிய மருத்துவமனை வரை நீளும் கூட்டாளி

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் சிறப்பு லோகோ வெளியிடப்பட்டதுடன், புதிய சீஷெல்ஸ் தேசிய மருத்துவமனை மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்வி மையத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், விண்வெளியை அமைதி வழியில் பயன்படுத்துவதற்கான கூட்டு ஆராய்ச்சி, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம், விவசாயக் கல்வி மற்றும் சீஷெல்ஸ் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளுக்கான சான்றிதழ் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உடன்படிக்கைகளும் கையெழுத்தாகியுள்ளன. இவற்றுடன் 6 ஆம்புலன்ஸ்கள், 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகிய பொருட்களையும் இந்தியா சீஷெல்ஸிற்கு வழங்கியுள்ளது.

Advertisement