வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4.2 டன் உதவிப் பொருட்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 7) இந்தியா சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நேபாள்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த பொருட்கள் இந்திய அரசின் சார்பில் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங் அவர்களால் பாங்கே மாவட்ட முதன்மை அதிகாரி ககேந்திர பிரசாத் ரிஜாலிடம் ஒப்படைத்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தார்பாய்கள், தூங்கும் பைகள், போர்வைகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.
நேபாளத்திற்கு இந்தியாவின் உதவி
நேபாளத்தில் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இடைவிடாத மழை பெய்ததால் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இந்நிலையில், இந்திய அரசாங்கம் தற்போது முதற்கட்டமாக அத்தியாவசியமான சில உதவிப் பொருட்களை அனுப்பியுள்ள நிலையில், மற்ற அத்தியாவசிய சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அவற்றை விரைவில் நேபாளத்திற்கு இந்தியா வழங்கும் என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு நேபாள அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று அது கூறியது.