'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார். லாகூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், PML(N) கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர், "ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு இந்தியா விருந்தளித்து கொண்டிருக்கும் போது, பாகிஸ்தான் பிரதமர் பணத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தானால் ஏன் இதுபோன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை? நமது அசிங்கமான நிலைக்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார்.
"இந்தியாவின் பார்வையில் நாம் எங்கே நிற்கிறோம்?": நவாஸ் ஷெரீப் கேள்வி
பாகிஸ்தானில் ஏழைகள் உணவுக்காக போராடி வருவதாக முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலையை விமர்சித்த ஷெரீப், "நம் நாட்டிற்கு இதைச் செய்தவர்கள் தான் மிகப்பெரிய குற்றவாளிகள்" என்று கூறினார். 1990இல் தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா பின்பற்றி முன்னேறி உள்ளதாக அவர் மேலும் கூறினார். "அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, அவர்களின் கருவூலத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது. இப்போது அவர்களின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது" என்று ஷெரீப் கூறியுள்ளார். "ஆனால் நாம் ஒரு பில்லியன் டாலர்களைக் கூட பிச்சை எடுக்கிறோம். இந்தியாவின் பார்வையில் நாம் எங்கே நிற்கிறோம்?" என்றும் அவர் பேசியுள்ளார்.