LOADING...
பாக்ஸ் சிலிக்கா அமைப்பில் இணைய இந்தியாவிற்கு அமெரிக்கா அழைப்பு: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா?
பாக்ஸ் சிலிக்கா அமைப்பில் இணைய இந்தியாவிற்கு அமெரிக்கா அழைப்பு

பாக்ஸ் சிலிக்கா அமைப்பில் இணைய இந்தியாவிற்கு அமெரிக்கா அழைப்பு: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 12, 2026
07:30 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்பது செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் ஒரு கூட்டமைப்பாகும். நவீன மின்னணு சாதனங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகியவற்றிற்குத் தேவையான சிப்களின் விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். தற்போது இந்த அமைப்பில் முழுநேர உறுப்பினராக இணைய இந்தியாவிற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

சீனா

சீனாவிற்கு வைக்கப்படும் செக்

உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை ஒன்றிணைக்கிறது. பாக்ஸ் சிலிக்கா அமைப்பின் மூலம் சீனாவிடமிருந்து சிப் இறக்குமதி செய்வதைக் குறைத்து, இந்தியா போன்ற நம்பகமான நாடுகளில் உற்பத்தியைப் பெருக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

இந்தியாவிற்கு ஏன் இந்த அழைப்பு?

இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசின் செமிகண்டக்டர் மிஷன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் இந்தத் துறையில் ஈர்க்கப்பட்டுள்ளன. டாடா மற்றும் அமெரிக்காவின் மைக்ரான் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்தியாவின் அபரிமிதமான மனித வளமும், மென்பொருள் திறனும் செமிகண்டக்டர் துறையில் உலக நாடுகளுக்கு ஒரு மாற்றுத் தீர்வாகத் தெரிவதால், இந்தியாவை இந்த அமைப்பில் இணைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.

Advertisement

அரசியல்

சர்வதேச அரசியலில் ஏற்படும் மாற்றங்கள்

இந்தியா இந்த அமைப்பில் இணைவதன் மூலம் சர்வதேச அளவில் ஒரு தொழில்நுட்ப வல்லரசாக உருவெடுக்கும். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து உயர் தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு எளிதாகக் கிடைக்கும். அதே சமயம், இது ஆசிய பிராந்தியத்தில் இந்தியா - சீனா இடையிலான போட்டியை மேலும் தீவிரப்படுத்தும். சீனாவின் சிலிக்கான் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியாவை ஒரு முக்கியப் பகடையாக அமெரிக்கா முன்னிறுத்துகிறது. வரும் ஆண்டுகளில் மின்னணுத் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

Advertisement