டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகும் விஜய்! கரூர் சம்பவத்தில் அதிரடி திருப்பம்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவரும் நடிகருமான விஜய், கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராக உள்ளார். கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சம்மன்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிய விஜய்க்கு சம்மன்
விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் ஆய்வு செய்துள்ள சிபிஐ, கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெளிவு பெற இன்று விஜய்க்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வரும் இந்த விசாரணை, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைச் சிக்கலில் சிக்கியுள்ள அதே நேரத்தில், இந்த சிபிஐ விசாரணையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தவெக தரப்பில், மாநில அரசின் பாதுகாப்பு குறைபாடே இந்த நெரிசலுக்கு காரணம் என வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்பதால், இன்றைய நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.