LOADING...
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது- ராணுவ நடவடிக்கைக்கு தயார் என டிரம்ப் அதிரடி
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது- ராணுவ நடவடிக்கைக்கு தயார் என டிரம்ப் அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2026
09:20 am

செய்தி முன்னோட்டம்

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த HRNA அமைப்பின் தரவுகளின்படி, இதுவரை 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 538 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய ரியால் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தால் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாடு தழுவிய கிளர்ச்சியாக மாறியுள்ளது. இதனை ஒடுக்க ஈரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், இந்த வன்முறைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.

கண்டனம்

ஈரான் மக்கள் மீது ஒடுக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம்

மக்கள் மீதான இந்த அடக்குமுறைக்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் புலம்பெயர்ந்த ஈரானியர்கள் கண்டனம் தெரிவித்துப் போராடி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஈரான் அரசு வரம்பு மீறிச் செயல்படுகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்காக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் விருப்பம்

இந்த நிலையில், ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னரே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், நாடு கடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவி, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கொலையாளிகளுக்குத் துணையாக இருக்காமல், நாட்டு மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் நிலவும் இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement