இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்குள் இந்திய-கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் அறிவித்திருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனடாவின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். மேலும், இந்த திட்டத்திற்கான "சிறந்த இலக்கு" இந்தியா தான் என்று முன்பு கனடா கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவும் இந்தியாவும் 2010ஆம் ஆண்டு முதல் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றி விவாதித்து வருகின்றன. கடந்த ஆண்டு முறைப்படி இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது.
கனடா மீது விமர்சனங்களை முன்வைத்த பிரதமர் மோடி
இந்தியாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக சீக்கிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு கனடாவாகும். ஆனால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்துவரும் சீக்கிய-காலிஸ்தான் தீவிரவாதத்தால் சிதைந்துள்ளன. சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்தித்த பிரதமர் மோடி, சீக்கிய பிரிவினைவாத குழுக்களை கனடாவில் செயல்பட அனுமதித்ததாக கனடா மீது விமர்சனங்களை முன்வைத்தார். கனடாவில் இயங்கும் தீவிரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வது குறித்து அவர் வலுவான கவலைகளை தெரிவித்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், தற்போது அந்த பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான வர்த்தக திட்டத்தை தேதி குறிப்பிடாமல் கனடா ஒத்திவைத்துள்ளது.