இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்குச் சாதகமான ஒழுங்குமுறை நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து அனைத்து நாடுகளும் ஒருமித்த முடிவை எட்டியுள்ளதாக அமெரிக்கப் பொருளாதார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் தெரிவித்துள்ளார். அடுத்த நூற்றாண்டை ஆளப்போகும் இந்த தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தனியார் துறை முதலீடுகளைத் திரட்டவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
புதிய நாடுகள்
பாக்ஸ் சிலிகா கூட்டணியில் இணைந்த புதிய நாடுகள்
வாஷிங்டனில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பக்கவாட்டில் அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சிலி, கோஸ்டாரிகா, கிரீஸ், கஜகஸ்தான், பனாமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய புதிய நாடுகள் இந்த பாக்ஸ் சிலிகா கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகக் குறைந்த நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சியில், இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் மாநாட்டின் போது அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த அமைப்பின் உலகளாவிய ஆதரவு முப்பத்தைந்து நாடுகளாக விரிவடைந்துள்ளது.
இந்தியா
மாநாட்டில் பங்கேற்ற இந்திய உயர்மட்டக் குழுவினர்
இந்த சர்வதேச உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நாகராஜ் நாயுடு ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இவர்களுடன் இந்தியத் தொழிற்துறையின் முக்கியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நெகிழ்வான தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவது குறித்துப் பிற நாட்டு அரசாங்கங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
எதிர்காலம்
ஏஐ துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகள்
இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க மூத்த அதிகாரி ஜேக்கப் ஹெல்பெர்க், செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்காலம் என்பது யார் முதலில் சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகிறார்கள் என்பதில் இல்லை என்று குறிப்பிட்டார். மாறாக யார் முதலில் அதிக உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை உருவாக்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறினார். கூடுதல் ஆற்றல், அதிக கம்ப்யூட்டிங் திறன், அதிகமான செமிகண்டக்டர் சிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தை உருவாக்குவதன் மூலமே தனியார் முதலீடுகளை ஈர்த்து ஏஐ கண்டுபிடிப்புகளை உலகளவில் வேகப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.