ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்கை அமெரிக்கா கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் திங்கள்கிழமை(மார் 27) தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்த் படேல், "சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை செலுத்துவது எந்தவொரு ஜனநாயகத்தின் மூலதனமாகும். இந்திய நீதிமன்றங்களில் திரு காந்தியின் வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். மேலும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பது தொடர்பான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை குறித்து இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் பேசி வருகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்கா
"இந்தியாவுடன் தொடர்பு கொள்ளும் போது, ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாப்பதையும், எங்களது இரு ஜனநாயக நாடுகளையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம்," என்று மேலும் அவர் கூறினார். ஒரு கேள்விக்கு பதிலளித்த படேல், இருதரப்பு உறவுகளைக் கொண்ட நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்கா தொடர்பு கொள்வது இயல்பானது என்று கூறினார். குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சிகள் இணைந்து பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன.