'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது அதிக வளர்ச்சி விகிதத்துடன் பிரகாசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரிவுத் தலைவர் டேனியல் லே நேற்று(ஏப் 11) இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அது "மிகவும் வலுவான பொருளாதாரம்" என்றும் கூறினார். "ஆம், 2022ல் இந்தியாவிற்கான வளர்ச்சி விகிதம் 6.8 ஆக உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளிகளில் ஒன்றாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வளவு உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது -.2 திருத்தத்துடன் 5.9 ஆக விகிதம் குறைந்துள்ளது." என்று அவர் கூறியுள்ளார். 2023-24 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சிக் விகிதத்தை 6.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக IMF குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 6.4 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்கும்: RBI
உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாகத் இருக்கிறது என்று உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் 4.9 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 4.4 சதவீதமாகவும் குறையும் என IMF கணித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) கணிப்பைக் காட்டிலும் IMF வளர்ச்சி கணிப்பு குறைவாக உள்ளது. 2022-23 நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியும், ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டில் 6.4 சதவீதம் ஜிடிபி வளர்ச்சியும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. இதற்கிடையில், பணவீக்கம், கடன் மற்றும் உயரும் வட்டி விகிதங்களால் நிதித்துறைக்கு ஏற்படும் அபாயங்கள் பற்றிய கவலைகளை IMF எழுப்பியுள்ளது.