Loading...
வரலாற்றில் முதன்முறை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவி நீக்கம்; காரணம் என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவி நீக்கம்

வரலாற்றில் முதன்முறை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவி நீக்கம்; காரணம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
09:28 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பு வகித்து வந்த கரீம் கான், பாலியல் அத்துமீறல் மற்றும் தீவிர ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகள் காரணமாகத் தனது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் கரீம் கானை பதவியிலிருந்து நீக்கப் பெரும்பான்மை ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஐசிசி வரலாற்றிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் தலைமை வழக்கறிஞர் என்ற நிலையை அவர் அடைந்துள்ளார்.

தீர்மானம்

82 உறுப்பு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

கடந்த 2024 ஆம் ஆண்டு கரீம் கான் மீது அவரது கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைப் புகாரளித்தார்.

இது குறித்து ஐநா சபையின் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பு (OIOS) நடத்திய விரிவான விசாரணையில், கரீம் கான் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தீவிர ஒழுங்கு மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், கரீம் கானைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஆதரவாக 82 உறுப்பு நாடுகள் வாக்களித்தன.

இருப்பினும் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கரீம் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

பிடிவாரண்ட்

இஸ்ரேல், ரஷ்யா பிடிவாரண்டுகளில் மாற்றமில்லை

கரீம் கான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவரது பதவிக் காலத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக வெளியிடப்பட்ட சர்வதேச கைது பிடிவாரண்டுகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் அந்த பிடிவாரண்டுகள் அனைத்தும் ICC நீதிபதிகள் குழுவால் பிறப்பிக்கப்பட்டவை என்பதால், வழக்கறிஞரின் மாற்றம் அவற்றைப் பாதிக்காது.

தற்போது புதிய தலைமை வழக்கறிஞர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, துணை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் விசாரணைப் பிரிவை வழிநடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்கா

அமெரிக்காவின் தடைகள் மற்றும் வெனிசுலாவின் வெளிநடப்பு

கரீம் கானின் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்ததற்காகக் கரீம் கான் மற்றும் ICC அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே தடைகளை விதித்திருந்தது.

இந்த சூழலில் கரீம் கானின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு எதிராக மட்டுமே நடுநிலைமையின்றி செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக வெனிசுலா நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT