மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார். அலெக்ஸ், ஹைட்ரனென்செபாலி (Hydranencephaly) எனப்படும் அரிய நரம்பியல் கோளாறுடன் பிறந்தவர் ஆவார். இந்தக் குறைபாட்டில், மூளையின் பெரும்பகுதி இல்லாமல், அந்த இடம் மூளைத் தண்டுவட திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். அலெக்ஸ் பிறக்கும்போதே, பெரும்பாலான மூளைப் பகுதிகள் இல்லாமல் இருந்ததால், அவர் நான்கு வயதுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால், அனைத்து மருத்துவக் கணிப்புகளையும் மீறி அவர் 20 வயதை அடைந்ததற்கு, அவரது பெற்றோர் அன்புதான் காரணம் என்று கூறுகின்றனர்.
ஹைட்ரனென்செபாலி
ஹைட்ரனென்செபாலி குறைபாடு
அலெக்ஸின் தந்தை ஷான் சிம்ப்ஸன் இதுகுறித்து விளக்குகையில், "அலெக்ஸுக்கு மூளையே இல்லை. என் சுண்டு விரலில் பாதி அளவுதான் மூளையின் பின்புறத்தில் இருக்கும் செரிபெல்லம் உள்ளது. அவ்வளவுதான்" என்று தெரிவித்தார். அலெக்ஸுக்குப் பார்க்கவோ, கேட்கவோ முடியாது என்றாலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும், இருப்பையும் அவரால் உணர முடியும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். பொதுவாக, ஹைட்ரனென்செபாலி குறைபாடுள்ள குழந்தைகள், பெரும்பாலும் ஒரு வருடத்திற்குள் இறந்துவிடுவார்கள். எனவே, அலெக்ஸின் 20 ஆண்டுகள் வாழ்க்கை ஒரு மருத்துவ அதிசயமாகக் கருதப்படுகிறது. தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், அன்புமே அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று அவரது பெற்றோர் நம்புகின்றனர்.