உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம்
மனித வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறிக்கும் "டூம்ஸ்டே கடிகாரம்" செவ்வாயன்று புதுப்பிக்கப்பட உள்ளது. இது முன்னணி அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கணிப்புகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். இந்த கடிகாரத்தின் நேரம் எவ்வளவு மாற்றப்படும் என்பதை அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் செவ்வாயன்று காலை 10:00 மணிக்கு(1500 GMT) அறிவிக்கும். இந்த கடிகாரம் "மனிதகுலம் சுய அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதற்கான உருவகம்" என்று இந்த புல்லட்டின் விவரிக்கிறது. இந்த அப்டேட், நம் செயல்களை "மீட்டமைப்பதற்கான ஒரு அழைப்பாக" பார்க்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கூறி இருக்கிறது. 11 நோபல் பரிசு பெற்றவர்களை உள்ளடக்கிய அறிவியல் மற்றும் பாதுகாப்பு வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் இந்த கடிகாரத்தின் முட்களை மீட்டமைப்பதற்கான முடிவு எடுக்கப்படுகிறது.
மனிதனால் ஏற்படுத்தப்படும் எந்தெந்த அழிவுகள் கருத்தில் கொள்ளப்படும்?
உக்ரைன் போர், உயிரி-அச்சுறுத்தல்கள், அணு ஆயுதங்கள், காலநிலை நெருக்கடி, அரசு வழங்கும் தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை 2023ஆம் ஆண்டு கணக்கில் எடுத்துக் கொள்வதாக புல்லட்டின் தெரிவித்துள்ளது. இந்த புல்லட்டின் 1945இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜேராபர்ட் ஓபன்ஹைமர் மற்றும் முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்த மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய பிற விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது. இந்த கடிகாரம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு, இந்த கடிகாரம் அப்டேட் செய்யப்பட்ட போது உலகம் அழிவதற்கு 100 நொடிகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. வரலாற்றிலேயே ஊழி காலம் இவ்வளவு குறைவாக கணக்கிடப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு அடுத்தபடியாக 1991ஆம் ஆண்டில் உலகம் அழிவதற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டது.