ஹார்முஸ் ஜலசந்தி: போரின் நடுவே ஈரானின் 'சுங்கச் சாவடி'யாக மாறிய கடல் வழி
செய்தி முன்னோட்டம்
உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதத்தை விநியோகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது ஒரு விசித்திரமான சூழலை சந்தித்து வருகிறது. இது முழுமையாக மூடப்படவும் இல்லை, அதே சமயம் தடையின்றித் திறக்கப்படவும் இல்லை. ஈரான் இதனை ஒரு 'கட்டுப்படுத்தப்பட்ட பாதையாக' மாற்றியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 140 கப்பல்கள் இந்த வழியாக சென்றன. ஆனால், மார்ச் மாதத்தில் இதுவரை வெறும் 138 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன (அதாவது ஒரு நாளைக்கு 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே). இது 95 சதவீத வீழ்ச்சியாகும். தற்போது சுமார் 2,000 கப்பல்கள் ஜலசந்தியை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் முன்னேற முடியாமல் தவித்து வருகின்றன.
டோல்
'தெஹ்ரான் டோல் பூத்': ஒரு கப்பலுக்கு ₹18 கோடி?
சுயஸ் கால்வாயைப் போல ஹார்முஸ் ஜலசந்தியையும் தனது வருமான ஆதாரமாக ஈரான் மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டணம்: ஒரு பெரிய கச்சா எண்ணெய் டேக்கர்(VLCC) பாதுகாப்பாகக் கடக்க சுமார் 2 மில்லியன் டாலர்(சுமார் ₹18 கோடி) வரை ஈரான் வசூலிப்பதாக கூறப்படுகிறது. யுவான் பரிமாற்றம்: இந்தக் கட்டணம் அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன 'யுவான்' நாணயத்தில் பெறப்படுவதாகத் தெரிகிறது. இது சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க ஈரான் எடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. கடுமையான சோதனை: ஈரான் புரட்சிகர காவற்படை(IRGC), கப்பலின் உரிமையாளர், அதில் உள்ள சரக்கு மற்றும் பணியாளர்கள் விவரங்களை சரிபார்த்த பின்னரே ஒரு ரகசியக் குறியீட்டை(Code) வழங்கி, தனது ரோந்துக் கப்பல்கள் மூலம் பாதுகாப்புடன் வழிநடத்திச் செல்கிறது.
அனுமதி
யாருக்கு அனுமதி?
ஈரானை தாக்காத அல்லது ஈரானுடன் நட்பு பாராட்டும் நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனா: உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவுக்கு இதுவரை 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாகச் சென்றுள்ளது. இந்தியா: இதுவரை 6 இந்தியக் கப்பல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 20 இந்தியக் கப்பல்கள் 540 இந்திய மாலுமிகளுடன் கடக்கக் காத்திருக்கின்றன. துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கப்பல்களுக்கும் ஈரான் அனுமதி அளித்துள்ளது.