ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்
ஆறு தசாப்தங்களுக்கு பிறகு மொராக்கோ நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக பெரும் நிலநடுக்கத்தால் ஒரு கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், அட்லஸ் மலைகளில் திக்த் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் வசித்துவந்தன. கிட்டத்தட்ட அந்த 100 குடும்பங்களும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மொராக்கோவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மொரோக்கா நாடு முழுவதும் குறைந்தது 2,122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,421 பேர் காயமடைந்தனர். வட ஆபிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் குறைந்தது 300,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவை உலுக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:11 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மேலும், அது நடந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS கூறியுள்ளது. மொராக்கோ நிலநடுக்கத்தின் மையம் மொராக்கோவின் பொருளாதார மையமான மராகேக்கிற்கு தெற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலைகளில் அதிகமாக இருந்தது. இது வட ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான டூப்கல் மற்றும் பிரபலமான மொராக்கோ ஸ்கை ரிசார்ட்டான ஒகைமெடனுக்கு அருகில் அமைந்துள்ளது.