இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ஏமனின் ஹூதிகள் செவ்வாயன்று செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு அமெரிக்க மற்றும் ஒரு பிரிட்டிஷ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமன் துறைமுகமான ஹொடைடாவிற்கு மேற்கே செங்கடலின் தெற்குப் பகுதியில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் இருந்து அதே நாளில் இரண்டாவது கப்பல் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரிட்டிஷ் இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்(UKMTO) தெரிவித்துள்ளது. அந்த இரண்டாவது கப்பல் அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கிரேக்க நாட்டை சேர்ந்த கப்பலாகும்.
இங்கிலாந்து கப்பல் மீது மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன
எனினும், இந்த தாக்குதல் கடல்பரப்பில் இருந்து நடத்தப்பட்டதா அல்லது ராக்கெட் மூலம் நடத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், ஹூதிகள் 'ஸ்டார் நாசியா' மீது மூன்று ஏவுகணைகளை வீசியதாகக் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை, ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குச் சொந்தமான 'மார்னிங் டைட்' என்ற சரக்குக் கப்பல் மீது மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன. ஏமனின் வடமேற்கு சாதா மாகாணத்தில் உருவான ஹூதிகள் என்ற ஆயுதக்குழு, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.