பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை
"இஸ்லாமிய அடையாளச் சிதைவை" தடுப்பதற்காக 'ஹோலி' கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் 'ஹோலி' கொண்டாடிய போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம், "இஸ்லாத்தின் கலாச்சார மற்றும் தார்மீக பண்புகளை நிலைநிறுத்தும் இளைஞர்களை உருவாக்குவது தான் உயர் கல்வி நிறுவனங்களின் பணி" என்று கூறி இருக்கிறது. மேலும், "நாட்டின் சமூக-கலாச்சார விழுமியங்களுக்கு தொடர்பே இல்லாத, நாட்டின் இஸ்லாமிய அடையாளத்தை சிதைக்கும் 'ஹோலி' போன்ற பண்டிகைகளை மாணவர்கள் கொண்டாடப்படுவதை பார்ப்பது வருத்தமளிக்கிறது." என்றும் பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம் மேலும் கூறி இருப்பதாவது:
இந்துப் பண்டிகையான ஹோலியை மாணவர்கள் கொண்டாடும் ஒரு வைரல் வீடியோ கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் நற்பெயரையும் பாதித்துள்ளது. பாகிஸ்தானின் கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் மரபுகளில் வேரூன்றிய கொள்கைகளையும் தேசத்தின் சித்தாந்தத்தையும் பாதுகாத்து, இஸ்லாமிய தேசத்தின் உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் பொறுப்பு உயர்கல்வி ஆணையத்திற்கு இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதில் மதப் பன்முகத்தன்மையின் பங்கு மிகவும் அவசியமானது. ஆனால் அதை அதிகபட்சமாக செய்வது நல்லதல்ல. பகுத்தறிவு சிந்தனைகளில் இருந்து விலகி, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அவர்களைப் பயன்படுத்தும் சுயநல ஆர்வலர்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் அடையாளம் மற்றும் சமூக விழுமியங்களுடன் பொருந்தாத செயல்களில் பங்கேற்பதை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தவிர்க்க வேண்டும். என்று கூறியுள்ளது.