ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஆஸ்திரிய அரசு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரியா-ஜெர்மனி எல்லை நகரமான பிரவுனாவ் அம் இன் (Braunau am Inn) பகுதியில் அமைந்திருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு, பல ஆண்டுகள் சர்ச்சைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக மாற்றப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி புதிய நாசி ஆதரவாளர்களின் வழிபாட்டுத் தலமாகவோ அல்லது புனிதப் பயண மையமாகவோ மாறுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த மாற்றத்தை ஆஸ்திரிய அரசு மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரியாவில் நாசி குறியீடுகள் மற்றும் வணக்க முறைகள் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட கட்டடம் இனி பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு மையமாகச் செயல்படும்.
சர்ச்சை
பல ஆண்டு சர்ச்சையும் மாற்றமும்
1889-இல் ஹிட்லர் பிறந்த இந்த பாரம்பரியக் கட்டடம், தனியார் வசமிருந்தது.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தின் பயன்பாட்டில் இருந்த இக்கட்டடத்தை, 2017-இல் ஆஸ்திரிய அரசு கட்டாயக் கொள்முதல் செய்தது.
2019-இல் இதைக் காவல் நிலையமாக மாற்றும் திட்டத்தை அறிவித்து, சுமார் 20 மில்லியன் யூரோ செலவில் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது.
வெள்ளையடிக்கப்பட்ட இக்கட்டடத்தின் முகப்பில் தற்போது 'Police' என்ற பலகை மட்டுமே தொங்கவிடப்பட்டுள்ளது.
கட்டடத்தின் வெளியே மௌத்தாசன் சித்திரவதை முகாமில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைக் கல் ஒன்றில், "மீண்டும் ஒருபோதும் பாசிசம் வேண்டாம்" என்ற வாசகம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
இதில் ஹிட்லரின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.