அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நெவார்க் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுவாமி நாராயண் மந்திர் வசன சன்ஸ்தா என்ற கோவில் சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களைக் காட்டும் படங்களை இந்து அமெரிக்கன் அறக்கட்டளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. கோவிலின் சுவரில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது அந்த படங்களில் தெரிந்தன. இந்த சம்பவம் குறித்து நெவார்க் காவல்துறை மற்றும் நீதித்துறை சிவில் உரிமைகள் பிரிவுக்கு தகவல் தெரிவித்த இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, இதை ஒரு வெறுப்பு குற்றமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.
தொடர்ந்து வெளிநாடுகளில் சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்
சுவாமிநாராயண் மந்திர் வசன சன்ஸ்தாவில் நடந்துள்ள இந்த சம்பத்தை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடுமையாக கண்டித்ததுடன், கோவிலை சேதப்படுத்திய குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு இந்து கோவில் சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. கடைசியாக, கனடாவின் சர்ரே நகரில் உள்ள கோவில் ஒன்று நள்ளிரவில் தீவிரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.