Loading...
'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள்!' ஐநாவில் சீறிய இந்தியத் தூதர் அனுஜ் சொரூப்
ஐநா அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள்!' ஐநாவில் சீறிய இந்தியத் தூதர் அனுஜ் சொரூப்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
11:17 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மனநலம் மற்றும் பாலின நீதி குறித்து பேசும் இளைஞர்கள் பழிவாங்கப்படுவதாகவும், களங்கப்படுத்தப்படுவதாகவும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ஜீனா ரொமேரோ வெளியிட்ட அறிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் பேசிய இந்தியத் தூதர் அனுஜ் சொரூப், இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அநாமதேய மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்று கூறி தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

அரசியலமைப்பு உரிமைகள்

இந்திய அரசியலமைப்பு வழங்கும் உரிமைகள் குறித்து விளக்கம்

ஐநாவில் பேசிய இந்திய தூதர் அனுஜ் சொரூப், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்து சுதந்திரத்தையும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையையும் முழுமையாக வழங்குகிறது.

சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இந்த உரிமைகளை பாதுகாத்து வருகின்றன.

வெறும் அடிக்குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு ஐநா இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதன் நம்பகத்தன்மையையே குறைக்கிறது." என்று சாடினார்.

சிஜேபி போராட்டம்

சிஜேபி போராட்டம் மற்றும் அரசின் ஜனநாயக அணுகுமுறை

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்கள் குறித்தும், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பினருடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய நேரடி பேச்சுவார்த்தைகள் குறித்தும் தூதர் அனுஜ் சொரூப் சுட்டிக்காட்டினார்.

"அடக்குமுறை நிலவும் ஒரு நாட்டில், நையாண்டி அரசியல் செய்யும் இளைஞர் அமைப்பு அரசுக்கு எதிராக பேரணி நடத்திவிட்டு, தேசியத் தலைவர்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து பேச முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.

ADVERTISEMENT

ஐநாவுக்கு எச்சரிக்கை

விக்சித் பாரத் திட்டம் மற்றும் ஐநாவுக்கான எச்சரிக்கை

பிரதமரின் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் திட்டம் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் நாட்டின் முக்கிய இலக்குகளை வடிவமைப்பதில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இறுதியாக ஐநா பிரதிநிதிக்கு அறிவுறுத்திய அனுஜ் சொரூப், "140 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டின் மீது அநாமதேயக் கருத்துகளை வைத்து பொதுப்படையான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவறானது.

குற்றம் சாட்டுவதற்கு முன் உண்மைகளை தீர சரிபார்க்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.

ADVERTISEMENT