பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதனையடுத்து, இஸ்ரேல் தொடர்ந்து 8 மாதங்களாக காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 37,000 ஐத் தாண்டியுள்ளது. இதனால், சர்வதேசப் பின்னடைவை இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கத்தார் மற்றும் எகிப்திய பேச்சுவார்த்தையாளர்களை ஹமாஸ் அதிகாரிகள் சந்தித்த கூட்டத்திற்கு ஹமாஸ் தலைவர் சின்வார் ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.
'பாலஸ்தீனியர்களின் உயிரிழப்பு தேசத்திற்கு உயிரூட்டுகிறது': சின்வார்
அதில் அவர், தாங்கள் எதிர்பார்த்த இடத்திற்கு இஸ்ரேலை கொண்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் உள்ள ஹமாஸின் உயர் தலைவர் யாஹ்யா சின்வார், பாலஸ்தீனியர்களின் மரணங்களை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த அக்டோபர் 7 முதல் 37,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஏப்ரல் 10 அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சின்வாரின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து ஹமாஸ் தலைவர்களிடம் பேசிய சின்வார், தனது மகன்கள் மற்றும் பிற பாலஸ்தீனியர்களின் உயிரிழப்பு இந்த தேசத்திற்கு உயிரூட்டுகிறது என்றும், தனது தேசத்தின் மகிமை இதனால் உயர தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.