'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி, இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த ஜி20 மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாடு நாடுமுழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜி20 மாநாடு வரும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், கன்னிமாரா, கிண்டி ஐஐடி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் 20நாடுகளின் சார்பில் 100 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் சந்தீப் நந்தூரி
20 நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி1ம் தேதியன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பல்லவகால கலைச்சின்னங்களை காண வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு உள்ள கடற்கரைகோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை மாலை 3மணி முதல் 6மணி வரை கண்டு ரசிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பேரில், மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எவ்வாறு தமிழக பாரம்பரிய முறையில் வரவேற்பது, எந்த மாதிரியான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில்சென்று ஆய்வுசெய்துள்ளார். அங்கு சென்ற அவர் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.