ஈராக் முதல் வெனிசுலா வரை: அமெரிக்கா இதுவரை தாக்கிய நாடுகளின் முழுப் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
அமைதியை நிலைநாட்டப்போவதாக கூறி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கடந்த ஓராண்டில் மட்டும் 7 நாடுகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வெனிசுலா மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மற்றும் அந்நாட்டு அதிபர் கைது உலகையே உலுக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலின் போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் கைது செய்தன. மதுரோ ஒரு "போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதி" என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது மதுரோ நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் மீது பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலக நாடுகள்
டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் தாக்கப்பட்ட உலக நாடுகள்
இரண்டாவது முறையாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து தற்போது வரை, அமைதியை 'நிலை நாட்ட' பல உலக நாடுகளின் மீது டிரம்ப் அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் பட்டியல்: வெனிசுலா: வான்வழித் தாக்குதல், தரைப்படை ஊடுருவல் மற்றும் அதிபர் கைது. ஈரான்: 2025 ஜூன் மாதம் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல். நைஜீரியா: கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் சோமாலியா: 2025-ல் மட்டும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் மீது 111 முறை குண்டுவீச்சு. சிரியா: கடந்த டிசம்பரில் ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல். யேமன்: ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது வான் மற்றும் கடல்வழித் தாக்குதல். ஈராக்: ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்கள்.
போர்
டிரம்ப்: நோபல் பரிசு விரும்பும் அமைதி புறாவா? அல்லது போர் பிரியரா?
கடந்த ஜனவரி 2025-ல் பதவியேற்றபோது, தான் ஒரு "அமைதிக்கான அதிபர்" என்றும், எட்டிற்கும் மேற்பட்ட போர்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறிக்கொண்டார். ஆனால், அவர் பதவியேற்ற ஜனவரி 20, 2025 முதல் தற்போது வரை அமெரிக்கா வெளிநாடுகளில் மட்டும் சுமார் 622 முறை குண்டுவீச்சு அல்லது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களால் நைஜீரியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அதேசமயம், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் அமெரிக்கப் பாதுகாப்புக்காகவும் இந்தத் தாக்குதல்கள் அவசியம் என வெள்ளை மாளிகை நியாயப்படுத்துகிறது. டிரம்ப்பின் இந்த அதிரடி இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.