இல்லத்தரசியாக தொடங்கி வங்கதேச அரசியலின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய கலிதா ஜியா!
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் மற்றும் அந்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். அவருக்கு வயது 80. நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இல்லத்தரசியாக தனது வாழ்க்கையை தொடங்கி, நாட்டின் உயரிய பதவி வரை உயர்ந்த கலிதாவின் வியக்கத்தக்க பயணம் இதோ:
அரசியல் பிரவேசம்
இல்லத்தரசி டூ பிரதமர்: அரசியல் பிரவேசம்
1945-ல் பிறந்த கலிதா, 1960-ல் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்துகொண்டார். வங்கதேசத்தின் தந்தை முஜிப்பின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இராணுவ தளபதியான ஜியாவுர் ரஹ்மான் முக்கியத்துவம் பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார். 1981-ல் ஜியாவுர் ரஹ்மான் அதிபராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். அதுவரை அரசியலில் ஈடுபடாத கலிதா, தனது கணவர் தொடங்கிய வங்கதேச தேசியக் கட்சியை (BNP) வழிநடத்த முன்வந்தார். 1991-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று வரலாறு படைத்தார். 1991-1996 மற்றும் 2001-2006 என மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்தார். பெண்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
மோதல்
'பேகம்'களின் மோதல்
வங்கதேச அரசியலில் கலிதா ஜியா மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையிலான அரசியல் போட்டி உலக புகழ்பெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையிலான அதிகார போட்டியே வங்கதேசத்தின் 30 ஆண்டு கால அரசியலை தீர்மானித்தது. பரஸ்பர விரோதம் இருந்தபோதிலும், வரலாறு இரு பேகம்களையும் 1980களில் அசாதாரணமான, ஆனால் சங்கடமான கூட்டணிக்குள் தள்ளியது. 1982ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது எர்ஷாத்தின் பிடியில் அப்போது வங்கதேசம் இருந்தது. இரு தலைவர்களும் எர்ஷாத்தை அகற்றுவதற்கு ஒருங்கிணைந்த எதிர்ப்பு தேவைப்படும் என உணர்ந்தனர். தனிப்பட்ட பகைமையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஹசீனாவும், கலீதாவும் எர்ஷாத் எதிர்ப்பு கூட்டணியில் கைகோர்த்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக 1990ஆம் ஆண்டு எர்ஷாத் ராஜினாமா செய்தார்.
சிறைவாசம்
சவால்கள் மற்றும் சிறைவாசம்
கலிதா, 2018-ல் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்றார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டார். சமீபத்திய ஆண்டுகளில், அவரது மகன் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்தபடி கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது மறைவு வங்கதேசத்தில் ஒரு பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் கட்சியின் முழுமையான தலைவராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.