ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல்
இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் அதிவேக TGV ரயில்கள் "தீங்கிழைக்கும் செயல்களால்" தாக்கப்பட்டதாக பிரான்சின் தேசிய இரயில் ஆபரேட்டர் SNCF தெரிவித்துள்ளது. "இது TGV நெட்வொர்க்கை முடக்க பெரிய அளவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்" என்று SNCF தெரிவித்துள்ளது. பெரும் தாக்குதலால், லில்லி மற்றும் பாரிஸ் இடையேயான அதிவேகப் பாதையில் காலை 5:15 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த வார இறுதியில் பழுதான ரயில்கள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்கு பிறகு ரயில் நிலையங்களின் நிலை
பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
பாரிஸ் மற்றும் கிழக்கு பிரான்ஸுக்கு இடையேயான பாதையில் இருக்கும் மெட்ஸ் மற்றும் நான்சி நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட்ட தாக்குதல்களால் போக்குவரத்து கடுமையாக சீர்குலைந்துள்ளது. பிரிட்டானி மற்றும் நவ்வெல்லே-அக்விடைன் ஆகிய இடங்களுக்குப் பாதைகள் பிரிந்து செல்லும் அட்லாண்டிக் பாதையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பழுதுபார்க்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் பிரான்சின் தேசிய இரயில் ஆபரேட்டர் SNCF தெரிவித்துள்ளது.