பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்
பிரான்ஸில் 5 நாட்கள் ஆகியும் ஓயாத கலவரத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நேற்று பிரான்ஸின் தெற்கு நகரமான மார்சேயில் காவல்துறையும் போராட்டக்காரர்களும் மீண்டும் மோதிக்கொண்டனர். இதனையடுத்து, அந்த நகரத்தில் மட்டும் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதங்களில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தியதை பல வீடியோக்களில் பார்க்க முடிகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், போராட்டக்காரர்கள் ஒன்று கூடுமாறு சமூக ஊடகங்களில் பல அழைப்புகள் விடுக்கப்பட்டதை அடுத்து, சாம்ப்ஸ்-எலிசீஸ் என்ற பகுதியில் பலத்த போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று 427போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்
இதனால், போராட்டக்காரர்களால் அந்த பகுதிக்குள் நுழைய முடியவில்லை. மேலும், பாரிசில் மட்டும் 126 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 427 பேர் கைது செய்யப்பட்டதாக உறுதிசெய்துள்ளார். சனிக்கிழமை நிலவரப்படி, காவல்துறை மற்றும் துணை ராணுவ ஜெண்டர்ம் படையை சேர்ந்த 45,000 அதிகாரிகள் வன்முறைப் போராட்டங்களைச் சமாளிக்க நியமிக்கப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர். அந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்நாடு முழுவதும் போலீஸ் அராஜகத்திற்கு எதிராகவும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.