அமெரிக்காவுக்கு ஷாக்! FBI தலைவரின் ஈமெயிலை உடைத்த ஈரான் ஹேக்கர்கள்; கசிந்தது ரகசிய புகைப்படங்கள் மற்றும் ரெஸ்யூம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயரிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹண்டலா ஹேக் டீம் என்ற குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இது அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
ஹேக்கிங்
ஹண்டலா ஹேக் குழுவின் அதிரடித் தாக்குதல்
காஷ் படேலின் மின்னஞ்சலை முடக்கிய ஹேக்கர்கள், அதில் இருந்த பல ரகசியப் புகைப்படங்கள் மற்றும் அவரது சுயவிபரக் குறிப்புகளை (ரெஸ்யூம்) இணையத்தில் வெளியிட்டுள்ளனர். "அசைக்க முடியாதது எனச் சொல்லப்படும் எஃப்பிஐயின் பாதுகாப்பு கட்டமைப்பை சில மணி நேரங்களிலேயே முழங்காலிடச் செய்துள்ளோம்" என்று அந்தக் குழு சவால் விடுத்துள்ளது. "உலகிற்கே நாங்கள் அறிவிப்பது என்னவென்றால், எஃப்பிஐ என்பது வெறும் பெயர் மட்டுமே, அதற்குப் பின்னால் உண்மையான பாதுகாப்பு எதுவுமில்லை" என அவர்கள் தங்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பழிக்குப் பழி
பழிவாங்கப்பட்ட எஃப்பிஐ இயக்குனர்?
கடந்த வாரம், இந்த ஹண்டலா ஹேக்கர்களின் இணையதள டொமைனை அமெரிக்க நீதித்துறை முடக்கியிருந்தது. அப்போது காஷ் படேல் வெளியிட்ட அறிக்கையில், "இத்தகைய கோழைத்தனமான சைபர் தாக்குதல்களை நடத்தும் ஒவ்வொருவரையும் எஃப்பிஐ வேட்டையாடும்" என்று எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, ஹேக்கர்கள் தற்போது நேரடியாக படேலின் மின்னஞ்சலையே குறிவைத்துள்ளனர். "பாதுகாப்புப் பற்றி பெருமை பேசும் அமெரிக்க அரசின் லட்சணம் இதுதானா?" என்று அவர்கள் எள்ளி நகையாடியுள்ளனர்.
அர்ப்பணிப்பு
டேனா போர்க்கப்பல் தியாகிகளுக்கு அர்ப்பணிப்பு
இந்த ஹேக்கிங் நடவடிக்கை, ஈரானின் டேனா போர்க்கப்பல் தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றும், இனி வரும் நாட்களில் அமெரிக்காவின் கீழ்நிலை ஊழியர்களின் பாதுகாப்பு இன்னும் மோசமான நிலையைச் சந்திக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து எஃப்பிஐ அல்லது காஷ் படேல் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் யுத்தம்
மத்திய கிழக்கு போர் மற்றும் சைபர் யுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நேரடிப் போர் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சைபர் யுத்தம் தீவிரமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கெடு விதித்துள்ள நிலையில், ஈரான் தனது பதிலடியை சைபர் தாக்குதல்கள் மூலமாகத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு இணையாக, இத்தகைய டிஜிட்டல் ஊடுருவல்களும் அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.