பைனான்ஸ் கிரிப்டோ ஹேக்கிங் பின்னணியில் வடகொரியா: அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது FBI
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான பைனான்ஸில் இருந்து சுமார் $6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 53,000 கோடி) கிரிப்டோ சொத்துக்கள் சுருட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வடகொரிய நாட்டின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 29 நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான சைபர் தாக்குதலுக்கு வடகொரியாவின் 'டிரேடர்ட்ரைட்டர்' என்ற இணையவழி குற்றக்குழுவே காரணம் என்று எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The FBI is releasing information advising the Democratic People's Republic of Korea (North Korea) was responsible for the theft of more than $6 billion USD in virtual assets from cryptocurrency exchange, Binance, on or about October 29, 2026. The FBI refers to this specific North… pic.twitter.com/TBUvUFln4n
— FBI Cyber Branch (@FBICyberBranch) October 31, 2026
எச்சரிக்கை
FBI அறிக்கை மற்றும் எச்சரிக்கை
கடந்த ஆண்டு பைபிட் கிரிப்டோ தளத்தில் நடைபெற்ற $1.5 பில்லியன் டாலர் ஹேக்கிங் சம்பவத்திற்கும் இதே டிரேடர்ட்ரைட்டர் குழுவே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடப்பட்ட நிதியை ஹேக்கர்கள் சட்டவிரோதமாக பணமாக மாற்றுவதை தடுப்பதற்காக, ஹேக்கர்களின் கணக்குகளுடன் தொடர்புடைய கிரிப்டோ முகவரிகளை முடக்குமாறு கிரிப்டோ வர்த்தக தளங்கள் மற்றும் பிளாக்செயின் அமைப்புகளுக்கு எஃப்பிஐ அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
எஃப்பிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஹேக்கர்கள் திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களை பிரதானமாக Ethereum நாணயமாக மாற்றி வருகின்றனர் என்றும், பரவலாக்கப்பட்ட நிதித் தளங்கள் (DeFi) மற்றும் இன்ஸ்டன்ட் ஸ்வாப் சேவைகள் வழியாக நிதியை வேறு கணக்குகளுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இழப்பு
90% இழப்பை ஈடுசெய்த பைனான்ஸ்
TRM லேப்ஸ் அமைப்பின் கொள்கை அதிகாரி கூறுகையில்,"ஹேக்கர்கள் பிடிபடாமல் இருக்கத் திருடப்பட்ட நிதியைச் சிறிய சிறிய தொகைகளாகப் பிரித்துச் சிறிய எக்ஸ்சேஞ்சுகள் வழியே மாற்ற முயல்வர். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். இது இணைய வேகத்தில் நடந்த வங்கிச் சூறையாடல்" எனக் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் கிரிப்டோ சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்கும் வகையில் பைனான்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்த சொந்த கையிருப்பு நிதியை பயன்படுத்தி திருடப்பட்ட தொகையில் 90 சதவீதத்திற்கு இணையான கிரிப்டோ நாணயங்களை உடனடியாக மீளடைவு செய்துவிட்டதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
பயனர்களுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படாத வகையில் 100% தொகையும் முழுமையாக ஈடுசெய்யப்படும் என பைனான்ஸ் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.