ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?
இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் ஆரம்பித்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த மோதலால் 400 இஸ்ரேலியர்களும் 313 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, மொத்த இறப்பு எண்ணிக்கை 713ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸின் வரலாறு, சித்தாந்தம் மற்றும் கோரிக்கைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பயங்கரவாத குழுவான ஹமாஸ் எப்படி தொடங்கியது?
இந்த அமைப்பு 1987 ஆம் ஆண்டு அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ராண்டிசி ஆகியோரால் எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு அங்கமாக நிறுவப்பட்டது. ஹரகத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா என்பதன் சுருக்கமே 'ஹமாஸ்' ஆகும். இதற்கு இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் என்று பொருள். பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தருவதும், இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசா ஆகிய பகுதிகளை இஸ்ரேலில் இருந்து தனியாக பிரித்து இஸ்லாமிய அரசை நிறுவுவதும் தான் தங்களது இலக்கு என்று , ஹமாஸ் 1988ஆம் ஆண்டில் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு யார் உதவுகிறார்கள்?
1967க்கு முன்பு இஸ்ரேலின் எல்லை எந்த அளவு இருந்ததோ அந்த எல்லைக்குள் இஸ்ரேல் நாடு இருந்து கொண்டு, பாலஸ்தீனிய அகதிகளை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அனுமதித்தால், தாங்கள் போரை நிறுத்த தயாராக இருப்பதாக முன்பு ஹமாஸ் கூறியது. ஆனால், ஹமாஸ் தங்களை ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய இஸ்ரேல், ஹமாஸின் இந்த சமாதான பேச்சு வார்த்தையை மறுத்துவிட்டது. ஈரான், சிரியா ஆகிய நாடுகளும் லெபனானில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹெஸ்பொல்லாவும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பெரும் உதவிகளை செய்து ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க கொள்கையை எதிர்ப்பதுதான் இந்த குழுவின் முக்கிய கொள்கையாகும். ஈரான் வெளிப்படையாக ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு நேற்று ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பு ஆதரவளிக்கும் நாடுகள்
பாலஸ்தீனப் பகுதிகளிலும் மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் ஹமாஸுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஹமாஸ் நடத்தி வரும் தாக்குதல்களை ஆதரித்துள்ளன. இந்த போருக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று கத்தார் கூறியுள்ளது. அரபு லீக் மற்றும் ஜோர்டான், இஸ்ரேலின் கொள்கைகள் தான் இந்த மோதலுக்கு காரணம் என்று கூறியுள்ளன. எகிப்து, மொராக்கோ மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மோதல்களை கட்டுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. 2018இல், ஹமாஸின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐநா பொதுச் சபையில் வாக்களிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் எப்படி பிரச்சனை ஆரம்பித்தது?
1948ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனம் என்ற நாட்டில் பெரும்பான்மையாக அரேபியர்கள் இருந்தார்கள். அதுபோக, சிறுபான்மை சமூகமாக யூதர்கள் இருந்தனர். பிரிட்டன் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனம் இருந்த போது, பாலஸ்தீனத்தை யூதர்களுக்கான நாடாக மாற்ற பிரிட்டன் முயற்சித்தது. அதனால் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே பிரச்சனை ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பாவில் இருந்து தப்பி வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு குடி பெயர்ந்தனர். இதனால், யூதர்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியது. இந்த நேரத்தில் தான் பிரிட்டனின் உதவியுடன் இஸ்ரேல் என்ற நாட்டை அந்நாட்டில் இருந்த யூதர்கள் நிறுவினர். அந்த சமயத்தில் நடத்த போரில் பாலஸ்தீனர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.