மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்களை பறித்த கொடூரமும், அச்சமும் இன்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.
இதனிடையே இங்கிலாந்து, சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவத்துவங்கியுள்ளதாக என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த புதிய வகை கொரோனா 'ஒமிக்ரான்' வகை கொரோனாவில் இருந்து உருமாற்றம் பெற்றுள்ளது.
அதன்படி, 'எரிஸ் கொரோனா வைரஸ் EG.5' என்னும் பெயரில் மருத்துவத்துறையில் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த உலக சுகாதார அமைப்பு இந்த 'எரிஸ்' கொரோனா வகையினை, 'மாறுபாடு' என்று வகைப்படுத்தியுள்ளது.
அதேபோல் EG.5 வைரஸ் போன்ற பல கொரோனா வைரஸ் வகைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா
மக்கள் வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தல்
மற்றவகை கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில் இந்தவகை வைரஸ் தற்போதுவரை பொது சுகாதாரத்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 'எரிஸ்'கொரோனா தற்போது அங்கு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்த 'எரிஸ்'கொரோனாவால், வயதானோர் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரமைய அதிகாரி,"இந்தவார அறிக்கையில் கோவிட்-1,9 பரவல் அதிகரித்து வருவதனை காணமுடிகிறது. இதுகுறித்த விகிதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது"என்று கூறியுள்ளார்.
அதனையடுத்து,"மக்கள் வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றவேண்டும். சுவாசநோய் இருந்தால், மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நன்று" என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் கடந்த மே-மாதமே கண்டறியப்பட்டது என்று தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளது.