அமெரிக்காவில் அதிகரிக்கும் EG.5 கொரோனா தொற்று; இரண்டே வாரத்தில் 12 சதவீதம் உயர்வு
பிரிட்டன் முழுவதும் வேகமாக பரவி வந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, 'எரிஸ்' எனும் EG.5, தற்போது அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில், 17.3 சதவீதம், எரிஸ் தொற்றை கொண்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில், 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, புதிய எரிஸ் வகை மாறுபாடான EG.5.1 தொற்றுடன், உலகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, இது தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் பரவலாக உள்ளது.
இந்தியாவில் EG.5 வகை கொரோனா பாதிப்பு
இந்தியாவிலும், மகாராஷ்டிராவில் EG.5 வகை கொரோனா பாதிப்பு, கடந்த மே மாதம் முதல்முறையாக கண்டறியப்பட்டாலும், பாதிப்பின் வேகம் அதிகரிக்கவில்லை. இந்தியாவில், EG.5.1 க்ளஸ்டர்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், துணைவேறுபாடு பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் பரவியுள்ளது. ஆனால் தேசிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவும் வாய்ப்பு ஏதும் தற்போதைக்கு இல்லை. அதே நேரம், இங்கிலாந்தில், 'யுகே ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி' வெளியிட்ட தரவுகளின்படி, அங்கு EG.5 இப்போது 14.55 சதவீத கொரோனா நோயாளிகளை பாதித்துள்ளது என்றும், வாரத்திற்கு 20.51 சதவீதம் என்ற வேகத்தில் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், இந்த வகை தொற்று செப்டம்பருக்குள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.