ஊழியர்களுக்கு 'ஸ்நாக்ஸ்' வழங்குவதை நிறுத்திய கூகுள்!
கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்தது. ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்குவதில் கூகுள் நிறுவனம் முன்னோடியாகவே இருந்திருக்கிறது. அலுவலகத்தில வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான சலுகையாக இலவச ஸ்நாக்ஸை வழங்கி வந்தது கூகுள். இந்நிலையில் இந்த இலவசமாக ஸ்நாக்ஸ் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். செலவைக் குறைப்பதற்காகவே இலவச ஸ்நாக்சை கூகுள் நிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசும்போது, "இலவச ஸ்நாக்ஸை வழங்கப்படவில்லை என்றாலும் ஊழியர்களுக்கு தேவையான மற்ற சலுகைகளை வழங்குவதை கூகுள் நிறுவனம் உறுதிசெய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள்!
முன்னதாக, செலவைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது கூகுள். ஸ்நாக்ஸ் மட்டுமல்லாது லாண்டரி சேவை, மதிய உணவு மற்றும் மாசஜ் போன்றவற்றுக்கும் சலுகைகளை வழங்கி வந்தது அந்நிறுவனம். மேற்கூறிய சலுகைகளையும் நிறுவத்தவோ அல்லது குறைக்கவோ இருப்பதாக இம்மாத தொடக்கத்தில் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதுமட்டுமல்லாது சில இடங்களில் சிறிய அலுவலகங்களுக்கு மாறவிருப்பதாகவும் இதனால், ஊழியர்கள் வேலை பார்க்கும் இடத்தைப் பங்கிட்டு வேலை செய்ய வேண்டும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. மேற்கூறிய நடவடிக்கைகள் அனைத்தும், குறிப்பிட்ட அலுவலகங்களின் தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.