2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
புவி வெப்பமயமாதலால் உலக பனிப்பாறைகள் கரைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக பல ஆய்வுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சூழல் இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் அண்டார்டிகாவில் வாழும் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 12நாடுகளை சேர்ந்த 28 நிறுவனங்களின் விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, 2100ஆம் ஆண்டிற்குள் 60% உயிரினங்களும் 80% எம்பரர் பென்குயின்களும் அழிந்து விடுமாம். இந்த ஆய்வு அறிக்கையை 'PLOS பயாலஜி' என்ற இதழில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். அழிவை தடுக்க கிட்டத்தட்ட $1.92 பில்லியன் செலவாகும் என்றும் ஒரு வருடத்திற்கு $23 மில்லியன் செலவழிக்க வேண்டி இருக்கும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:
"காலநிலை மாற்றத்தால் பென்குயின்களின் மரபணு மாற்றமடைந்துள்ளது, அவற்றின் இனப்பெருக்க சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவை இப்படியே தொடர்ந்தால், 2100ஆம் ஆண்டிற்குள் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும். மேலும், அண்டார்டிகாவில் உள்ள கடல் பறவைகள் மற்றும் உலர் மண் நூற்புழுக்களும் இதே ஆபத்தில் தான் இருக்கின்றன. அண்டரிக்காவில் அதிகம் மனிதர்கள் இல்லாததால், தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் கண்டத்திற்கு வெளியே இருந்து தான் வருகின்றன. பசுமை இல்ல வாயு, கார்பன் உமிழ்வு, கால நிலை மாற்றம் போன்றவையே இதற்கு முக்கிய காரணம். 1900ஆம் ஆண்டிற்கு பின், அண்டார்டிகாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்." என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.