முன்பின் தெரியாதவர்களுக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் எலான் மஸ்க்; எதற்காகத் தெரியுமா?
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பிற்கு ஆதரவாக அவர் தனது அமெரிக்கா பிஏசி மூலம் மேற்கொண்டு வரும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டவர்களில் இருந்து தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தாராள நன்கொடையின் முதல் பயனாளியாக பென்சில்வேனியாவின் ஜான் டிரெஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் மேற்கொள்ளும் பிரச்சாரம் மற்றும் அவரது அரசியல் நடவடிக்கைக் குழுவான அமெரிக்கா பிஏசிக்கு ஆதரவைப் பெறுவதற்கான எலான் மஸ்கின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
முதல் பயனாளிக்கு எலான் மஸ்க் ஒரு மில்லியன் டாலர் வழங்கும் வீடியோ
அரசியல் ஈடுபாடு மற்றும் அமெரிக்கா பிஏசி
தற்போதைய அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தீவிரமாக ஈடுபட்டு, தனது செல்வத்தைப் பயன்படுத்தி தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பில் உள்ளார். இதற்காக டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அரசியல் நடவடிக்கை அமைப்பான அமெரிக்கா பிஏசியை அவர் நிறுவினார். அதிகம் போட்டி உள்ள மாநிலங்களில் வாக்காளர்களைத் திரட்டி பதிவு செய்வதை இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் நோக்கங்களை அடைய அது சிரமப்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. எலான் மஸ்க் மக்களைக் கையெழுத்திடக் கோரும் மனுவில், "முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் தாங்கும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. கீழே கையெழுத்திடுவதன் மூலம், முதல் மற்றும் இரண்டாவது திருத்தங்களுக்கு எனது ஆதரவை உறுதியளிக்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கின் நிதி பங்களிப்புகள் மற்றும் அரசியல் சார்பு
அதிக போட்டி உள்ள மாநிலங்களில் வாக்காளர்களிடமிருந்து ஒரு மில்லியன் கையெழுத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது. இந்த பணத்தைப் பெறுவதற்கான ஒரே நிபந்தனை மனுவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். எலான் மஸ்க், இந்த திட்டத்திற்காக அமெரிக்கா பிஏசிக்கு 75 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார். பல ஆண்டுகளாக, எலான் மஸ்க் படிப்படியாக குடியரசுக் கட்சிக்கு சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் ஆதரவாளராக வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். பதிலுக்கு, டிரம்ப் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசாங்க செயல்திறன் கமிஷன் தலைவராக எலான் மஸ்கை நியமிப்பதாக உறுதியளித்தார்.