Loading...
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்: 2014-16 பதிவை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்த எபோலா பரவலில், இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்: 2014-16 பதிவை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

ஜனநாயக காங்கோ குடியரசில் தற்சமயம் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, மனித வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய 2014-2016 எபோலா பரவலை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. 2026 மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா பரவலில், இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த முறை பரவி வரும் எபோலா வைரஸ் 'புண்டிபுக்யோ' எனப்படும் மிகவும் அரிய வகையை சேர்ந்தது. இதற்கு முன் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இவ்வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

பரவல்

பிப்ரவரி முதலே பரவிய வைரஸ்

மிக முக்கியமாக, இந்த குறிப்பிட்ட வகை எபோலா வைரஸை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ உலக அளவில் இல்லை என்பது நிலைமையைக் கூடுதல் தீவிரமாக்கியுள்ளது.

பிப்ரவரி மாதமே இந்த வைரஸ் பரவத் தொடங்கிய போதிலும், தொடக்கத்தில் இது மலேரியா அல்லது டைபாய்டு எனக் தவறாகக் கணிக்கப்பட்டதாகக் கூறப்படுக்கிறது.

காங்கோவின் கிழக்குப் பகுதியில் நிலவும் உள்நாட்டு அரசியல் ஒழுங்கற்ற சூழ்நிலைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களால் 30% பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சென்றடைய முடிவதாக WHO ஆப்பிரிக்க மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

மனித சோதனையில் புதிய தடுப்பூசி

இந்நிலையில், 'புண்டிபுக்யோ' வகை எபோலா வைரஸை கட்டுப்படுத்த ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி சோதனை செய்ய பிரிட்டனின் 'MHRA' மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இருவேறு ஆன்டிவைரல் சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியுமா என்பது குறித்தும் காங்கோவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT