Loading...
உழைப்பிற்கேற்ற ஊதியம்: சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியருக்கு ₹4 கோடி லம்போர்கினி கார் பரிசளித்த நிறுவனம்
சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியருக்கு ₹4 கோடி லம்போர்கினி கார் பரிசளித்தது துபாய் நிறுவனம்

உழைப்பிற்கேற்ற ஊதியம்: சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியருக்கு ₹4 கோடி லம்போர்கினி கார் பரிசளித்த நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
04:30 pm

செய்தி முன்னோட்டம்

துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ரிச்கி பிராப்பர்ட்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது மூன்றாவது ஆண்டு விழா விருதுகள் இரவில் சிறந்த பெண் ஊழியருக்கு லம்போர்கினி உருஸ் சொகுசு காரைப் பரிசளித்துள்ளது. நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டின் சிறந்த ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடாலியா சாவேஸ் என்பவருக்கு இந்த கார் வழங்கப்பட்டது. மேடையில் கோப்பையை பெற்ற பிறகு, அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இந்த சொகுசு கார் வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சொத்து விற்பனை

இரண்டு ஆண்டுகளில் $500 மில்லியன் சொத்துக்கள் விற்பனை சாதனை

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் $500 மில்லியனுக்கும் (சுமார் ₹4,200 கோடி) அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வெற்றிகரமாக விற்பனை செய்து நடாலியா சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் விற்பனையில் முதலிடம் பிடித்து அவர் இச்சாதனையை நிகழ்த்தியதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

துபாய் சந்தையில் லம்போர்கினி உருஸ் காரின் விலை சுமார் ₹2.3 கோடி முதல் ₹4 கோடி வரை விற்கப்படுகிறது.

ஊழியரின் இந்த உழைப்பைப் பாராட்டி நிறுவனம் வழங்கிய பரிசு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறை வருமானம் குறித்து இணையத்தில் காரசார விவாதம்

இந்த பரிசு வழங்கப்பட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ரெடிட் உள்ளிட்ட தளங்களில் பெரும் விவாதம் தொடங்கியது.

ரியல் எஸ்டேட் தரகுத் துறையில் கிடைக்கும் பிரம்மாண்ட வருமானம் காரணமாகவே பலரும் இத்துறைக்கு வருகிறார்கள் என பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்பம் போன்ற பிற துறைகளில் அதிகபட்ச சம்பளமே குறைவாக இருக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் துறை மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடிவதாகப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

சவால்கள்

சவால்கள் நிறைந்த கமிஷன் பணி எனத் துறை சார்ந்தவர்கள் விளக்கம்

இந்த கூற்றிற்குப் பதிலளித்த ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள், இத்துறையில் கோடிக்கணக்கில் சொத்துக்களை விற்பனை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என விளக்கமளித்தனர்.

ரியல் எஸ்டேட் தரகர்கள் பல மாதங்களாக எவ்வித நிலையான சம்பளமும் இன்றி உழைக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதிக அபாயமும் கடின உழைப்பும் நிறைந்த இத்துறையில், திறமையும் விடாமுயற்சியும் கொண்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய பிரம்மாண்டமான பலன்கள் கிடைக்கும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT