பெண்கள் முத்தலாக் தெரிவிக்கமுடியுமா? இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி
துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார். இளவரிசி ஷைக்கா, ஜூலை 16 அன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், தனது கணவர் மற்ற கம்பனியன்களுடன் பிஸியாக இருப்பதால், அவரை உடனடியாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். கூடவே முத்தலாக் முறையில் மூன்று முறை 'I Divorce You' எனத்தெரிவித்து, 'இப்படிக்கு மாஜி மனைவி' என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஷைக்கா மஹ்ரா, தொழிலதிபர் ஷேக் மனா அல் மக்தூமை கடந்த மே 2023இல் மணந்தார். இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை இரண்டு மாதங்களுக்கு முன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களும் முத்தலாக் கூறலாம் என குறிப்பிட்ட சில பிரிவினர் தெரிவிக்கின்றனர்
இஸ்லாமிய சட்டத்தில், உடனடி விவாகரத்து நடைமுறையினை "தலாக்-இ-பித்தாத்" என்று அழைக்கிறார்கள். இதை கணவன் ஒரே அமர்வில் "தலாக்" என்று மூன்று முறை உச்சரித்து (முத்தலாக்) உடனடியாக திருமணத்தை செல்லாததாகலாம். பாரம்பரியமாக, இஸ்லாமிய சட்டத்தின் பல விளக்கங்களில் ஆண்கள் மட்டுமே தலாக் உச்சரிக்க முடியும். மறுபுறம், பெண்கள், "குலா" எனப்படும் வேறுபட்ட செயல்முறையின் மூலம் விவாகரத்து கோருவதற்கான விருப்பம் உள்ளது. இதற்கு அவர் தனது கணவர் அல்லது நீதிமன்றத்திடம் இருந்து விவாகரத்து கோர வேண்டும். சில அதிகார வரம்புகளில், பெண்கள் தங்கள் திருமண ஒப்பந்தத்தில் (நிகாஹ்நாமா) தலாக் உச்சரிப்பதற்கான உரிமையை வழங்கும் ஒரு பிரிவையும் சேர்க்கலாம். இளவரசி ஷேய்கா, துபாயின் தற்போதைய ஆட்சியாளராக இருக்கும் ஷேக் முகமது பின்-இன் மகள் ஆவார்.