கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன்: கிரிமியாவில் உள்ள வெடிமருந்துக் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் இருந்து 5 கிமீ (3-மைல்) சுற்றளவு வரை வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிரிமியா என்பது கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு தீபகற்ப பகுதியாகும். உக்ரைனுக்கு சொந்தமான இந்த பகுதியை தற்போது ரஷ்யா ஆட்சி செய்து வருகிறது. ரஷ்யாவால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மத்திய கிரிமியாவில் உள்ள எண்ணெய் கிடங்கையும் ரஷ்ய இராணுவ கிடங்குகளையும் உக்ரைன் ராணுவம் அழித்துவிட்டதாக உக்ரைனிய அரசு தெரிவித்துள்ளது.
2014இல் கிரிமியாவை உக்ரைனிடமிருந்து கைப்பற்றியது ரஷ்யா
இந்த தாக்குதலால் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியது என்று கிரிமியாவுக்கான ரஷ்ய கவர்னர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார். இதனால், பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்து ரயில் போக்குவரத்தும், தற்காலிகமாக தடைப்பட்டு, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த தாக்குதலால் 12 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என்றும் நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்குவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2014இல் கிரிமியாவை உக்ரைனிடமிருந்து கைப்பற்றியது. 5 நாட்களுக்கு முன், கிரிமியாவின் ஒரு முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால், 2 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.