277 எலெக்ட்ரல் வாக்குகள்: மீண்டும் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப்
உலகே எதிர்பார்த்திருந்த அந்த தேர்தலின் இறுதியில் மீண்டும் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப். இந்த வெற்றியின் மூலம், அவர் தொடர்ச்சியாக இல்லாத இரண்டாவது ஜனாதிபதி ஆகிறார். க்ரோவர் கிளீவ்லேண்டிற்குப் பிறகு தேர்தலில் தோல்வியடைந்து மீண்டும் பதவிக்கு வரும் முதல் ஜனாதிபதியாக டிரம்ப் ஆவார். அது மட்டுமின்றி, அமெரிக்க வரலாற்றில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் என்ற பெருமையை டிரம்ப் பெறுகிறார். இதற்கு முன்னர் அந்த பெருமையை ஆளும் ஜோ பைடன் பெற்றிருந்தார். இது மட்டுமின்றி, சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள டிரம்ப், சட்டப்பூர்வ குற்றச்சாட்டின் கீழ் பதவியில் இருக்கும் முதல் அமெரிக்க அதிபர் ஆவார். டிரம்ப் பதவியில் இருந்த காலத்தில் இரண்டு முறை பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிகமாக கூறியது, குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்கள், கருக்கலைப்பு தடை மற்றும் ராணுவ கட்டுப்பாடு குறித்து தான். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளை இலக்காகக் கொண்ட பயணத் தடை உட்பட, அவரது மிகவும் சர்ச்சைக்குரிய குடியேற்றக் கொள்கைகளை மீட்டெடுக்கவும் விரிவுபடுத்தவும் அவர் உறுதியளித்துள்ளார். "அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையை" நடத்துவதாக அவர் தொடர்ந்து உறுதியளித்துள்ளார். அதோடு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் முக்கிய எண்
அமெரிக்க தேர்தல் நடைமுறையின் படி, பொதுவாக வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அதாவது, பொதுமக்கள் தங்களின் ஓட்டுகளை அளித்த பின், அந்த ஓட்டுகள் ஒவ்வொரு மாநிலத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் சார்ந்த கட்சி நியமித்த பிரதிநிதியிடம் செல்கின்றன. எனவே, வாக்காளர்களின் ஓட்டுகளுடன், கட்சியின் பிரதிநிதிகளின் ஓட்டுகளும் முக்கியமானவை. மேலும், எந்த வேட்பாளருக்கு அதிக பிரதிநிதிகள் ஓட்டளிக்கின்றனரோ, அந்த வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த முறையில், ஒட்டுமொத்தமாக 538 பிரதிநிதிகளுள் 270 பிரதிநிதிகள் ஓட்டளித்த வேட்பாளர் தான் வெற்றியாளர். அந்த வகையில் டிரம்ப் பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கை 277.
Twitter Post
ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்பு விழா
டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில், புதிய அதிபரின் பதவியேற்பு விழா ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. புதிய தலைமைக்கு விரைவாக மாறும் பல நாடுகளைப் போலல்லாமல், அதிகாரத்தை சுமூகமாக ஒப்படைப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா கட்டமைக்கப்பட்ட 11 வார மாறுதல் காலத்தை பின்பற்றுகிறது.